நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அப்போது அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்று இரவு சுமார் 10 .30 மணியளவில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சென்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் விஜய் மீது செருப்பை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்பனு கோயம்பேடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.