உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (15) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.
தை முதலாம் திகதி தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது.