சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக உகண்டா செல்லவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19வது அரச தலைவர் உச்சி மாநாடு மற்றும் G77 மற்றும் சீனா, மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவில் உள்ள கம்பாலாவில் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) “பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற உள்ளது.
ஜி77 மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு உச்சிமாநாடுகளிலும் உரையாற்றவுள்ளதோடு, இந்த விஜயத்தின் போது ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கை வெற்றிகரமாக வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற இந்திய தொழில் குழும கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.