கடந்த ஆண்டு நவம்பரில் மாலைத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
எனினும் அந்தப் பரிந்துரைக்கு பிரதான எதிர்க்கட்சிகளான மாலைத்தீவு ஜனநாயக கட்சி (எம்.டி.பி) ஜனநாயகவாதிகள் கட்சியினர் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
இதனால் ஆளும் கூட்டணியான அதிபர் முய்சின் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் மாலைத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்கள் அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அப்போது மாலைத்தீவு ஜனநாயக கட்சி எம்பி அகமது, தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த ஷாஹீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதலின்போது மாலைத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.ஹசன் ஜரீருக்கும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் முகமது அஸ்லாம், துணைத் தலைவர் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக மாலைத்தீவு முற்போக்கு கட்சி மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை முக்கிய எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உறுப்பினர்கள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட 34 எம்.பி.க்களிடம் கையெழுத்திட்ட கடிதத்தைப் பெறவும் அவர்கள் முயற்சி செய்து வருவதாக மாலைத்தீவிலிருந்து வெளியாகும் `தி சன்’ இதழ் தெரிவித்துள்ளது.
எம்டிபி கட்சி மட்டுமல்லாமல் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடம் ஆதரவைப் பெற அவர்கள் முயற்சி செய்து வருகின்றன.
மேலும், அமைச்சர்கள் அலி இஹுசன், முகமது கசன் மவுமூன் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எம்.டி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தியாவுக்கு எதிரான நிலையை மாலைத்தீவு அரசு கடைப்பிடித்து வருவது, மாலைத்தீவு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றும் அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.