விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதை ஒட்டி உயர் அழுத்த மின் கம்பி மிகவும் தாழ்வாகச் சென்றது.
இதை மாற்றியமைக்குமாறு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. விளைவு, 18 வயது இளைஞர் ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
பள்ளியை ஒட்டி தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின்கம்பி பூபாலன் என்ற இளைஞரின் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் மயங்கிவிட்டார்.
மின்சாரம் தாக்கியதில் பூபாலனின் இரண்டு கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியை குணப்படுத்த வழி இல்லாததால் முழங்காலுக்கு கீழே கால்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து பூபாலனின் தந்தை மாரிமுத்து காணை போலீஸில் புகார் கொடுத்தார்.
ஜனவரி 20-ம் தேதி போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், எத்தனையோ மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்த மின் வாரிய அதிகாரிகள் பூபாலனுக்கு விபத்து நடந்த மறுநாளே உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
விபத்து நடப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்பே மின் கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்தாமல் மின்வாரிய அலுவலர்கள் அசட்டையாக இருந்ததால் பூபாலன் தனது இரண்டு கால்களை பறிகொடுத்திருக்கிறார்.