பெரு நாட்டில், கரடி பொம்மை வேடமிட்டு சென்று போதைப் பொருள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்யும் வீடியோ, இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் பெண் ஒருவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்வதற்காக போலீஸார் நூதன முறை ஒன்றை கடைபிடித்துள்ளனர்.
கரடி பொம்மை வேடமிட்டு, கையில் சாக்லேட் பெட்டியை எடுத்துக்கொண்டு காவலர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டி உள்ளார். வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது கரடி பொம்மை நின்றிருப்பதை கண்டு குழப்பம் அடைந்தாலும், அந்த பெண் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.
அப்போது கரடி பொம்மை வேடத்தில் இருந்த காவலர் அந்த பெண்ணுக்கு சாக்லேட் பெட்டியை கொடுத்துள்ளார். அதனை வாங்குவதற்காக அந்த பெண் கை நீட்டிய போது, அவரது கரங்களில் கை விலங்கு பூட்டிய போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு பெண்ணை அதே வேடத்தில் சென்று போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த பெண்களிடம் இருந்து சுமார் 1000 கொக்கைன் போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.