ரஷ்ய அதிபர் புதினின் பிரதான அரசியல் எதிரியும், ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்சி நவால்னி, ரஷ்ய சிறையில் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் எல்லைக்கு வெளியே மட்டுமன்றி உள்ளேயும் எதிர்ப்பாளர்களை விரும்பாதவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பெயரளவில் மட்டுமே எதிர்க்கட்சிகளும், அவற்றையொட்டிய அரசியலும் ரஷ்யாவில் உண்டு. மற்றபடி தேர்தல் மூலம் தேர்வாகவும் மன்னராகவே முடிசூடி வலம் வருபவர் புதின்.
கடந்த சில ஆண்டுகளாக புதினுக்கு அரசியல் ரீதியாக பெரும் குடைச்சல் கொடுத்தவரே அலெக்சி நவால்னி. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் புதின் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னி பரிதாபமாக இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவால்னி இறந்த தகவல் உறுதியானபோதும், அதன் பின்னணி காரணம் உள்ளிட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இன்று காலை அவர் இறந்ததாக கூறப்பட்டாலும், கடந்த சில மாதங்களாகவே நவால்னி சிறைவாசம் குறித்தும், அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வியும் நவால்னியின் ஆதரவாளர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. அந்தளவுக்கு ரஷ்ய உளவு ஏஜெண்டுகளால் ஏற்கனவே பலமுறை மரண தாக்குதல்களுக்கு நவால்னி ஆளாகியிருக்கிறார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக பல ரகசியங்களை உலகின் பார்வையில் தொடர்ந்து வெளிப்படுத்தியதால், ரஷ்யாவுக்கு வெளியில் வைத்தே அவர் மீது பல முறை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பல விஷம் சார்ந்த தாக்குதல்கள் என்பதால், அப்போதெல்லாம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி நவால்னி மீண்டிருக்கிறார். தேச துரோகம், நிதி மோசடி, அரசியல் குற்றங்கள் என ஏராளமான வழக்குகள் அவர் மீது இருந்தாலும், அவற்றில் கைதாகி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நவால்னி உயிரைப் பாதுகாக்க வேண்டியது புதினின் பொறுப்பாகிப் போனது.
தற்போதும் நவால்னி ஆதாரவாளர்கள், சிறையில் நவால்னி கொல்லப்பட்டதாகவே புதின் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.