தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்தும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாகவும், தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
வழக்கை விசாரித்த நீதிபதி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.