ஈழத்தமிழர்களை கனடா வரவேற்றவர்: முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனேடிய முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். கனடாவின் 18வது பிரதம மந்திரியான முல்ரோனி 1984 மற்றும் 1993 க்கு இடையில் தொடர்ச்சியான முற்போக்கு பழமைவாத பெரும்பான்மை அரசாங்கங்களை வழிநடத்தினார். ஈழத்தமிழர்களின் கனடா வந்தபோது இன்முகத்துடன் வரவேற்றவர். 

தேசிய, உலக விவகாரங்களில் கொந்தளிப்பான காலகட்டத்தில் கனடாவை வழிநடத்தி சென்றார். ஒன்பது ஆண்டு கனடிய பிரதமராக இருந்த அவர் NAFTA ஒப்பந்தத்தை எட்டியதுடன், GST வரியை அறிமுகப்படுத்தினார். 

கியூபெக் மாகாணத்தின் Baie-Comeau நகரில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். அரசியல் அறிவியல் கற்கும் பல்கலைக்கழக மாணவரான பிரையன் முல்ரோனி, Conservative பிரதமர் John Diefenbakerகரின் ஆலோசகரானார். அவர் பல ஆண்டுகளாக Conservative அரசியல் வளர்ச்சிக்கு பின்னணியில் கடுமையாக உழைத்தவர். சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 1976 இல் Progressive Conservative தலைமை பதவிக்கு போட்டியிட்டார். 


1983 இல் Progressive Conservative தலைமையை வென்றபோது அதிகாரத்திற்கான அவரது நாட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அவர் முதன் முதலில் Nova Scotia மாகாணத்தின், Central Nova தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Brian Mulroney 1984 ஆம் ஆண்டு கடுமையான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து, கனடிய வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்று பெரும்பான்மை ஆட்சி அமைத்தார். கனடாவின் 18ஆவது பிரதமராக மிகவும் கடினமான பல முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். சர்வதேச அரங்கில் கனடாவிற்கு ஒரு புதிய மரியாதையை பெற்றுக் கொடுத்தார். 

நிறவெறிக்கு எதிராக நாடுகளைத் திரட்டியதுடன், தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். கனடிய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்ட போது 1992ல் பிரையன் முல்ரோனியின் அரசியல் செல்வாக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்தது.


1993இல் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த நிலையில், சில மாதங்களில் அவரது அதிகாரம் Kim Campbellளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் Kim Campbell கனடாவின் முதல் பெண் பிரதமரானார். பதவியை விட்டு வெளியேறிய பின்னர், அவரது கட்சி 1993 பொது தேர்தலில் பெரும் தோல்வியை எதிர்கொண்டது.

இப்படி பல சவால்களை எதிர்கொண்ட பிரையன் முல்ரோனியை புற்றுநோய் ஆட்கொண்டது. இவரது மரணத்தை அறிந்ததும் நாடாளுமன்றம் அதன் நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. கனடா முழுவதிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள் தமது இரங்கல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Related Posts