7,000 மருத்துவர்களின் உரிமங்கள் ரத்து செய்ய தீர்மானம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 7,000 பயற்சி மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்ய தென்கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வேலைக்குத் திரும்ப அவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத் துணை அமைச்சர் இன்று (04) தெரிவித்தார்.

தென்கொரியாவில் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை அடுத்து, பிரச்சினை தலைதூக்கியது.

முதலில் தங்கள் வருமானம், வேலைச் சூழல் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் போர்க் கொடி உயர்த்தி வெளிநடப்புப் போராட்டத்தில் இறங்கினர்.

பிப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து ஏறத்தாழ 9,000 மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தென்கொரியாவில் உள்ள மொத்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களில் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக தென்கொரிய மருத்துவமனைகளில் முக்கிய சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அந்நாட்டில் மருத்துவ நெருக்கடிநிலை ஏற்பட்டது.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இராணுவ மருத்துவர்களும் சமூக மருத்துவர்களும் அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெளிநடப்புப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வேலைக்குத் திரும்புமாறு பயிற்சி மருத்துவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவமனைகளுக்குச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குத் திரும்பாத பயிற்சி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி இறுதிக்குள் வேலைக்குத் திரும்பாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தண்டனைகள் விதிக்கப்படக்கூடும் என்று தென்கொரிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அவர்களது உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படக்கூடும் அல்லது சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. (P)


Related Posts