2024ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், பூமியை கடக்கும்விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளது.
2024இஹெச் விண்கல் குறித்து அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதன் நகர்வை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அப்பல்லோ குழுமம் எனப்படும் அடிக்கடி பூமியை குறுக்கிடும் விண்கற்கள் குடும்பத்தை சேர்ந்த 2024இஹெச் விண்கல் சுமார் 5,06,000 கிமீ தொலைவில் பூமியை கடந்து செல்லும் என நாசா கணித்துள்ளது.
இந்த தொலைவு வெகு அதிகமாகத் தோன்றினாலும், பிரபஞ்சத்தை ஆராயும் வானியலில் இது மிகவும் குறைவு. பூமிக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற போதும், அளவில் சிறிய அந்த விண்கல்லின் வேகம் காரணமாக அதனை ஒதுக்காது நாசா தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
மணிக்கு 34,183 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி பாயும் இந்த விண்கல்லின் வேகம், வல்லரசு நாடுகளின் கண்டம் விட்டு கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட வேகமானது.