இந்தியாவில் அமுலுக்கு வந்த சர்ச்சைக்குரிய சட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள். அவ்வாறானவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பது அர்த்தமாகும்.

கடந்த 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது.

எவ்வாறாயினும் மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என சிலர் விமர்சித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து என்ன?

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் இச்சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழக அரசு இடமளிக்காது எனவும், மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச்சட்டம் அவசர கதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (P)


Related Posts