அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கும் பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் செயற்படும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் 20 ஆயுதமேந்திய தாக்குதல் பொலிஸ் படையணிகள் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்த தாக்குதல் படைப்பிரிவுகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் உத்தரவின் பேரில் மாத்திரம் செயற்படவுள்ளது.
அத்துடன் அடையாளங்காணப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை அழிப்பதற்கு இந்த குழுவினால் முழு நேரமும் செயற்படவுள்ளது.
குற்றச் செயல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள சில பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சுவதும் வேறு சிலர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை பேணுவதும்தான் பாதாள உலகக் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருவதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதாள உலகத்தை அடக்கத் தவறிய 62 பிரதேசங்களின் நிலைய உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளார்.
குறித்த 62 அதிகாரிகளையும் கொழும்புக்கு வரவழைத்த பொலிஸ் மா அதிபர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனிமேல் அந்தப் பகுதிகளில் பாதாள உலகக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், நிலைய உயர் அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சாதாரண கடமைகளில் இருப்பவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் மின்சார விநியோகம் தடைப்படும் ஆபத்து! | Thedipaar News