கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் ஸ்ரீ ரசண் பசவேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் கலபுர்கி மட்டுமின்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டால் காவல் துறையுடன் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை வீரர்களும் ஈடுபட்டனர்.
அதுபோல பிதார் மாவட்டம், இதகா கிராமத்தைச் சேர்ந்த ராமு(28) உள்ளிட்ட ஏராளமான ஊர்க்காவல் படை வீரர்கள் தேர் இழுக்கும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தேர்ச்சக்கரத்தில் சிக்கி ராமு, அசோக்ரெட்டி உள்ளிட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த ஊர்க்காவல் படை வீரர்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். படுகாயமடைந்த அசோக் ரெட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.