கால்நடை ஏலத்தில் இதுவரை இல்லாததாக பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் வியாட்டினா என்ற மாடு, அமெரிக்க டாலர் மதிப்பில் 4.8 மில்லியனுக்கு ஏலம் போயுள்ளது.
பிரேசிலில் அதிகம் வளர்க்கப்படும் இந்த நெல்லூர் ரக மாடு, இந்தியாவின் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை பூர்வாசிரமாக கொண்டது.
கால்நடைகளின் தரத்தை தீமானிக்கும் மரபியல் குணங்களின் முக்கியத்துவத்திலும் நெல்லூர் மாடு தனிச் சிறப்பு வாய்ந்தது. நெல்லூர் ரகம் அதன் வெண் தோல், ரோமங்கள் மற்றும் தனித்துவ திமில் காரணமாக கவனம் ஈர்த்து வருகிறது.
நெல்லூர் பின்னணியிலான இந்த ரக மாடுகள் பிரேசிலின் மிக முக்கியமான இனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இவை இந்தியாவின் வலுவான மற்றும் இணக்கமான ஓங்கோல் கால்நடைகளின் வழித்தோன்றல்களாகும். இவையும் ஆந்திராவை பின்னணியாக கொண்டவை.
1868-ல் பிரேசிலுக்கு முதல் ஜோடி நெல்லூர் மாடுகள் சென்றன. அடுத்தடுத்த இறக்குமதிகள் மற்றும் இனப்பெருக்கத்தின் காரணமாக பிரேசிலில் அதன் இருப்பு மேலும் அதிகரித்தது.
இவற்றின் வெப்பமான சூழலிலும் செழித்து வளரும் போக்கு, அதன் திறமையான வளர்சிதை மாற்றம் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான திறன் ஆகியவை கால்நடை வளர்ப்பாளர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. நெல்லூர் இனம் பிரேசிலில் பல்கிப் பெருக அந்நாட்டின் அறிவியல் அடிப்படையிலான அரவணைப்பும் ஒரு காரணமானது.