தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் டெல்த் தீவிற்கும் இடையே இருக்கும் சிறிய தீவுப்பகுதிதான் கச்சத்தீவு. இச்சிறிய தீவு 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.
இருப்பினும் 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாக அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது.
காங்கிரஸ் கட்சிதான் கச்சத்தீவினை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு அலட்சியமாக தாரை வார்த்து கொடுத்துள்ளது. இதற்கு, அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும் முதல்வர் கருணாநிதியும் உறுதுணையாக இருந்துள்ளனர்” என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர் குற்றசாட்டினை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இதுவரை இந்திய அரசு தரப்பிலிருந்து கச்சத்தீவு தொடர்பாக தங்களுக்கு கோரிக்கை எதுவும் வரவில்லை எனக்கூறியுள்ளது இலங்கை அரசு.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது என்னவென்றால், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் எங்களுக்கு அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை.
அப்படி அனுப்பி இருந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை உரியவகையில் பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்பது. இதையடுத்து இவ்விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
மேற்கொண்டு இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசிடம் கோருமா? அல்லது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.