ஆசிரியர் தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று ( 03) பதிவாகியுள்ளது.

மாணவனுக்கு உயிரெழுத்துக்கள் தெரியாத காரணத்தினால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது.

கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநரின் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் கூற்றுக்கு அமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காகவே ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அரசினால் ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதோடு, மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

எனினும், ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையை அறியாது அவர்களை அடித்து துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போது பதிவாகியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

 அவ்வாறின்றி பொறுப்பற்ற வகையில் செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருவதாக வடக்கு மாகாண  ஆளுநர் தெரிவித்துள்ளார்.


Related Posts