மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியம் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி கடந்த மார்ச் 12ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அகவிலைப்படி 50%ஆக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி 1ஆம் தேதி கணக்கிட்டு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அகவிலைப்படி 50%-க்கும் மேல் உயரும் போது, ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மானியம் ஆகியவை தானாகவே 25% உயர்த்தப்படும்.
அதன்படி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை மாதம் ரூ. 2,812.5 ஆகவும், விடுதி மானியம் மாதம் ரூ. 8,437.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊனமுற்ற குழந்தைகளுக்கு இரு மடங்காக மாதம் ரூ.5,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.