கனடா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் சிலரது தேர்தல் வேட்புமனுக்கள் இந் நாடுகளின் தேர்தல் ஆணையகங்களால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் எனக்குக் கிடைக்கப் பெற்றிருந்தன.
இவற்றுள் கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிக்பட்டிருந்த கனடா நாட்டில் இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்று என்னால் நியமிக்கப்பட்டது. பரிந்துரைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்த இவ் ஆய்வுப்குழுவின் பரிந்துரையுடன் கனடா தேர்தல் ஆணையம் உடன்படாமையால் அங்கு எழுந்த பிணக்குக்கு என்னால் உடனடியாகத் தீர்வு காண முடியவில்லை.
இந் நிலையில் கனடா தேர்தல் ஆணையகத்தால் எனக்கு அறிவிக்கப்பட பெயர் விபரங்களையே நான் இவ் அறிக்கையில் இணைத்துள்ளேன். தேர்தல் மூலம் அரசவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையின்போது ஏற்படும் பிணக்குகளை நாம் இயன்றவரை சுமூகமாகத் தீரத்துக் கொள்ளல் நன்று
. நாம் தீர்வைக் காணும் நடைமுறை மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். இப் பிணக்குகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு இடையூறாகவும் அமைந்து விடக்கூடாது. ஜனநாயக நடைமுறையில் செயற்படுபவர்களுக்கு மிகுந்த சகிப்புத்தன்மை இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைத் தமிழ் மக்கள் நினைவுகூரும் காலப்பகுதியில் தனது புதிய அரசவை அமர்வுகளை ஆரம்பிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரபிற்கு துணைநிற்கும் வகையில் உறுப்பினர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காலம் சார்ந்த அவசியத்தால் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கப் போதிய கால அவகாசம் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. . தேர்தல் குறித்து எழுந்த முறைப்பாடுகளையும், தீர்க்கப்படாத பிணக்குகளையும் கையாள நிறைவேற்று அதிகாரம் கொண்ட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து, அதனூடாக முறைப்பாடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை காலதாமதமின்றி எடுக்குமாறு 4 வது அரசவைக்குத் தேர்வு செய்யப்படப்போகும் பிரதமருக்குப் பரிந்துரை செய்கிறேன். இத் தேர்தல் நடைமுறையின்போது என்னோடு இணைந்து உழைத்த அனைவருக்கும் நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. ரஞ்சன் மனோரஞ்சன் தலைமை தேர்தல் ஆணையாளர்