CTC இன் சீர்திருத்தத்திலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களின் இந்த முயற்சிக்கான சமூகத்தின் ஆதரவுக்கு நன்றி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஊடக அறிக்கை !



1. இலங்கை அரசின் இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவு வணக்கத்தைச் செலுத்துவதோடு, கனேடியத் தமிழர் கூட்டாக எமது மக்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிர் பிழைத்தவர்களுடனும் ஒரு கூட்டாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் உறுதியாகவும் நாம் நிற்கிறோம்.


2. கடந்த வருடம் டிசம்பரில் கனேடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress - CTC), உலகத் தமிழர் பேரவையுடன் (Global Tamil Forum - GTF) இணைந்து ’இமயமலைப் பிரகடனம்’ என்ற பெயரில் ஆரம்பித்தபோது, கனேடியத் தமிழர் பேரவை மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் நாங்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தோம்.


3. CTC எமது சமூகத்துடன் எவ்வித ஆலோசனைகளையும் நடத்தாமல், இமயமலைப் பிரகடனத்தை பௌத்த மதத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொண்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் ஈடுபாடு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவுடனான அவர்களின் சந்திப்பு என்பன, மிகவும் கவலை தரக்கூடியதாகவும், எமது மக்களின் அரசியல், சமூக விருப்புக்களைக் கருத்தில் கொள்ளாதமை என்பது எமது மக்களுக்கு மிகுந்த கரிசனையையும் உண்டு பண்ணி இருந்தது.


4. கனேடியத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழர்களை அர்த்தமுள்ள வழியில் ஈடுபடுத்தத் தவறியதன் காரணமாகவே, இத்தகைய ஒரு தவறான நடவடிக்கை பேரவைக்கு சாத்தியமானது என்பதை ஒரு கூட்டாக நாங்கள் அடையாளம் கண்டுகொண்டோம்.

5. CTC தனது உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கும், அவர்களது சொந்த உறுப்பினர்களுக்கும் பொது சமூகத்திற்கும் பொறுப்புக் கூறுவதற்கும், அமைப்புக்குத் தேவையான கொள்கை, நடைமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த, CTC சீர்திருத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அவர்களின் செயல்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.


6. கனேடியத் தமிழர்கள் கூட்டாக ஒன்றிணைவதன் நோக்கம், CTC யினது ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், அதன் இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளை அமைப்பதில் சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதற்கும், அது கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே.


7. மேலும், இச்செயற்பாட்டில், தொடர்ச்சியாக மக்களின் கருத்துக்களை உள்வாங்கி CTC தம்மை சீர்திருத்தி, உண்மையாகவே கனேடியத் தமிழர்களின் குரலாக மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு CTC க்கு அழைப்பு விடுத்துள்ளதால், சமூகத்தின் குரல் எங்களோடு உள்ளடக்கப்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்தும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.



8. இமயமலைப் பிரகடனத் திட்டத்தை தாங்கள் இலங்கையில் உள்ள அமைப்புகளிடம் ஒப்படைத்ததாக CTC பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதை நாங்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றோம். இமயமலைப் பிரகடனத்தின் தொலைநோக்கு, இலங்கை மக்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும் என்றும் CTC யின் அறிக்கை மேலும் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பூரணமான பங்குபற்றுதலுடன் மட்டுமே எந்த ஒரு நல்லிணக்க முயற்சியும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்.


9. மிகச் சமீபத்தில் CTC அதன் உறுப்பினர்கள் மற்றும் கனேடிய நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் (Parliament Hill) ஒரு நினைவு வணக்க நிகழ்விற்கான அழைப்பை அனுப்பியது. அவ்வறிக்கையில், தமிழர்கள் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, இனவழிப்பாளர்களான இலங்கை அரசாங்கம் பற்றிய எந்தக் குறிப்பும் அதில் உள்ளடக்கப்படவில்லை.


10. இது போன்ற அறிக்கைகள் மற்றும் செயல்கள் ஆகியன நீதியைப் பெறுவதற்கும், இனவழிப்பாளர்களைப் பொறுப்புக் கூறவைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், இவ்விடயத்தில் மக்களின் உடனடிக் கவனம் அவசியமானது என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.


11. கனேடியத் தமிழர் பேரவை வெளிப்படையாக எமது மக்கள் மீதான இனவழிப்பை முன்நிறுத்தி குறித்த நினைவு நிகழ்வை நடத்த முயலாதமை, இனவழிப்புப் போரில் உயிர் பிழைத்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக வலியை ஏற்படுத்தியதாக நாங்கள் உணர்ந்தோம்.


12. இவ்விடயத்தில் கனடாவில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நமது சமூகம் என்பவற்றின் ஒன்றுபட்ட குரல் என்பன, மிக முக்கியமான இவ்விவகாரத்தில் CTC சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

13. வெவ்வேறு துருவங்களாக செயல்பட்டு வரும் எமது சமூக அமைப்புக்களை ஒன்றிணைத்து செயல்படுவதற்கான வழிகளைக் கண்டறிய எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். மேலும், ஒரு கூட்டாக எங்கள் செயல்பாடுகள் எப்போதும் எங்கள் நிறுவனங்களின் போதாமையை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் இருந்தன. எமது செயல்பாடுகள் ஒருபோதும் சமூகப் பொலிஸாராகவோ அல்லது எமது சமூக அமைப்புக்களை சேதப்படுத்தவோ கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்.

14. இந்நேரத்தில், கனேடியத் தமிழர் பேரவை நாடாளுமன்றத்தில் தமது நிகழ்வை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது என்ற அறிவிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், தமிழர்கள் மீதான இனவழிப்பு விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு அறிக்கையையும் CTC வெளியிடும் என்றும் நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.


15. மே 18, 2022 அன்று, கனேடிய நாடாளுமன்றம் தமிழர்கள் மீதான இனவழிப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், எண்ணற்ற தனிமனிதர்களின் தொடர்ச்சியான உழைப்பால் தமிழர்கள் மீதான இனவழிப்பை, கனடாவில் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆட்சி மன்றங்களும் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


16. 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான கட்டமைப்பு, கலாச்சார, அரசியல் அடக்குமுறைகளாலும், படுகொலைகள், இனக்கலவரங்கள், கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் மனித உரிமை மீறல்களின் வலிமிகுந்த வரலாற்றையும் உள்ளடக்கிய, இனவழிப்பு என்பது, குறிப்பாக எமது சமூகத்திற்கு, ஒரு வாழ்வியல் அனுபவமாக உள்ளது என்றே நாங்கள் நம்புகிறோம். தமிழர்களின் மனதில் இது பற்றிய எவ்வித குழப்பமும் இல்லை.


17. எங்கள் சமூக அமைப்புக்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் சார்பாக ஆற்றுப்படுத்தல் , நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்காக திறம்பட செயட்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.



18. இந்த நேரத்தில் CTC இன் சீர்திருத்தத்திலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களின் இந்த முயற்சிக்கான சமூகத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்பதை சமூகத்திற்கு நினைவூட்டவும் இவ்வேளையில் நாங்கள் விரும்புகின்றோம். ஆனால், செய்ய வேண்டிய வேலைகள் எங்களிடம் இன்னமும் நிறைய இருக்கிறன. அவ்வகையில் சமூகத்தின் தொடர்ந்த ஆதரவு எமக்கு தேவை.


19. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நீதியைப் பெறுவதற்கும், எங்கள் சமூக அமைப்புகள் திறம்பட, பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்வதற்கும், நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் இருக்கிறோம் என்பதை ‘கனேடியத் தமிழர் கூட்டு’ சார்பில் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.


மேலதிக தொடர்புகளுக்கு;


தொலைபேசி: (+1 ) 647-560-7013

மின்னஞ்சல்: canadiantamilcollective@gmail.com



உண்மையுள்ள,


கனேடியத் தமிழர் கூட்டு


Related Posts