ATM-மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், நூற்றுக்கணக்கில் பணம் காணாமல் மாயமாவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களிடம் திடீரென்று ரூ.295 வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் ஏன் பிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. உண்மையில் இந்த பணம் கடன் EMI தொகையை உரிய தேதியில் செலுத்தவில்லை என்பதால் தான் வசூலிக்கப்படுகிறது. வங்கிகளில் வீட்டு கடன் அல்லது வேறு ஏதாவது கடன் எடுத்திருந்தால், அதற்கான EMI தொகை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
சரியான தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இல்லையென்றால், அதற்கு 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இதனுடன் சேர்த்து 18 சதவீதம் GST-யாக 45 ரூபாய் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 295 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் இந்த அபராதத் தொகையை மாதந்தோறும் வசூலிக்கின்றன. ஆனால், சில வங்கிகள் பல மாதங்கள் சேர்த்து ஒரே அடியாக எடுத்துக் கொள்கின்றன. சாதாரண மக்களுக்கு இது குறித்து முன்னதாக ஒரு தகவல் கூட கொடுக்காமல் எடுப்பது தான் வங்கிகள் செய்யும் மோசமான செயல்.