3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் ரிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்திய நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டின் வறுமை காரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணி புரிந்து வந்த நிலையில் உடலில் தீ பரவி தீக்காயங்களுடன் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இவ்வாறான வழக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இந்த மூவருக்கு எதிராகவும் கொடுமை, மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நான்காவது சந்தேகநபரான றிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் றிஷாட் ஆகியோருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
டயகம பிரதேசத்தில் வசித்து வந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி உடலில் தீப்பிடித்து உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.