பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார்.

2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறிய இலங்கைய அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடபூர்த்தி நினைவூட்டுகின்றது.

15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த பெருமளவான அப்பாவி பொது மக்கள் உயிர் நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, யுத்தத்தின் போது தாம் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் சமூகத்தார் முன்னெடுத்திருந்த முயற்சிகளை தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலை தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம்.

உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத்தரப்பினர் மதிப்பளிக்க வேண்டும்.

யுத்தத்தில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங் கண்டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன், யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிய வண்ணமுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாக தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதிலும், கடந்த 15 வருட காலப்பகுதியில் பொறுப்புக்கூரலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருந்தன.

இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூரல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுவதை வலியுறுத்தியிருந்தது.

உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார்.

இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது குறிப்பாக 2009 மே மாத காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறல்கள் போன்றன பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக போர் நடைபெற்ற பகுதிகளில் சுமார் இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் மனிதக் கேடயங்களாக அடைபட்டிருந்தனர். இலங்கையின் வட மாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறிய கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதியில், இலங்கை படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போர் நடந்ததுடன், ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதுடன், நீதியையும் பொறுப்புக்கூரலையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related Posts