மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு, சிறுவன் ஒருவன், பல லட்சம் மதிப்பிலான போர்ஷே சொகுசு காரை குடிபோதையில் 200 கி.மீ. வேகத்தில் ஓட்டிச் சென்று, இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது மோதினான். இதில், படுகாயமடைந்த அந்த தம்பதியினர் உயிரிழந்தனர்.
இதனால் அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பிடித்து தாக்கினர். பின்னர் போலீஸார் வந்து சிறுவனை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த விபத்து புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவின் முக்கிய ரியல் எஸ்டேட் டெவலப்பரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 2 பேரின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிறுவனை கட்டுரை எழுதுமாறு பணித்து, 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.