இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் நீண்ட காலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர் பி.எச்.அப்துல் ஹமீது. கொழும்பில் பிறந்த இவரின் தனித்துவமான குரல் உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார்.
வானொலியில் குரலை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த நேயர்களுக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் நேரில் அப்துல் ஹமீது தோன்றினார். இன்று பிரபலமாக பாடிக் கொண்டிருக்கும் பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள் பலர் இவரது நிகழ்ச்சியில் பாடி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பி.எச்.அப்துல் ஹமீது உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் நேற்று செய்தி பரவியது. உலகத் தமிழ் அறிவிப்பாளரான அவர் மறைவு செய்தி கேட்டு பலர் கண்ணீர் வடித்தனர். ஆனால், அந்த செய்தி உண்மையில்லை என்பதை பி.எச்.அப்துல் ஹமீதே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், " இலங்கையில் நலமுடன் இருக்கிறேன். இது வெறும் வதந்தி. பலர் என்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் இறக்கவில்லை. எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகு பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்து விட்டது" என்று அவர் கண்ணீர் விட்டு வேதனையுடன் தெரிவித்தார்.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1805319569604567221