கனடாவில் கடந்த 2022ல் மட்டும் 105,000 கார்கள் திருடப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடத்திற்கு ஒரு கார் என திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கார் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கும் மிக மோசமான 10 நாடுகளின் பட்டியலில் கனடாவையும் இணைத்து மிக சமீபத்தில் இன்டர்போல் பட்டியலிட்டது.
கார் ஒன்று திருடு போனால், அதைப் பயன்படுத்தி மிகக் கொடூரமான வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. உள்ளூரிலேயே கனேடியர்களுக்கு விற்கப்படுகிறது. உருமாற்றம் செய்து வெளிநாடுகளில் விற்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி முதல் கனடாவில் இருந்து திருடப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட கார்களை உலகின் பல நாடுகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கார்களை அடையாளம்கண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் கார் திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு தொகை என சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, கனேடிய மக்கள் தற்போது கண்டறியும் கருவிகளை பொருத்துவதுடன், பாதுகாப்பு அதிகாரிகளையும் தங்கள் தெருக்களில் அமர்த்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கனேடிய பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், திருடு போன கார்களில் சிலவற்றை மீட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், 11 மாதம் விசாரணை முன்னெடுத்ததில் 1080 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளனர்.