பங்களாதேஷ் வன்முறை: நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பங்காளதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் பங்காளதேஷத்தை விட்டு தப்பி வெளியேறி இருக்கிறார்.

பங்காளதேஷை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் அல்லது திரிபுராவில் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு இராணுவம் கெடு விதித்தது.

பங்காளதேஷ விடுதலைப் போரில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருமாறியது.

பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பங்காளதேஷ் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் மாணவர்கள் புரட்சி வெடித்தது. மாணவர்களின் இடைவிடாத போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததால் பாதுகாப்பு படையினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்க முயன்றனர். இதில் மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2 மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ரத்த வெள்ளத்தில் பங்காளதேஷ் தகித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வங்கதேச ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் இராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது இராணுவம். ”

இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துதுள்ளார்..

மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு  இந்தியாவுக்கு  ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் தப்பிச் சென்றுள்ளதாகவும் மேற்கு வங்க மாநிலம் அல்லது திரிபுராவில் இருவரும் தஞ்சமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts