12 ஆழ்வார்களும் பாடல் பாடியதிருத்தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமாய் விளங்குவது திருப்பதி. இங்கு, தற்போதைய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தமிழை புறக்கணித்து வருகின்றனர்.
ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை ஆகிய தமிழக மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் ஏழுமலையானுக்கு நேர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி வருகின்றனர். அவர்கள் காலில் செருப்பு கூட அணியாமல் அவரவர் ஊர்களில் இருந்து நடைபயணமாக திருப்பதிக்கு வந்து, திருமலைக்கு மலையேறி சென்று, சுவாமியை தரிசனம் செய்த பின்னரே தங்களது நேர்த்தி கடனை முடிக்கின்றனர்.
திருப்பதி நகரின் முக்கிய இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் அனைத்து கூட்டுச் சாலைகளிலும் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் தர்ம தரிசனம் குறித்த அறிவிப்பு பலகை தேவஸ்தானம் வைத்துள்ளது. இதில் தமிழ் அறிவிப்பைக் காணவில்லை.
இது என்ன அறிவிப்பு பலகை என கேட்டால் கூட பதில் கூற ஆள் இல்லை என்பதே உண்மை. இந்த ஓரவஞ்சனை எதற்கு? என்பதே தமிழ் பக்தர்களின் கேள்வியாக உள்ளது.