இலங்கை அதிபர் தேர்தலில், சிறுபான்மை தமிழர்கள் யாருக்கு ஓட்டளிப்பர் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருந்தது. மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பெரு முயற்சி மேற்கொண்டனர். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் ஆன சஜித் பிரேமதாசாவுக்கு அதிகப்படியான ஓட்டுகள் தமிழர் பகுதிகளில் கிடைத்துள்ளன.
இவர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 40 சதவிகிதம் ஓட்டுக்களை பெற்றார். இவர், தமிழ் அமைப்புகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேத்திரனை விட அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசாவுக்கு முதல் கட்டத்தில் 32.75 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில், 44.11 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளது. இவர் மொத்தம் 45,30,902 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் பாக்கியசெல்வம், முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கையில், 2,26,343 ஓட்டுகள் பெற்றார்.
தற்போது அதிபராக வெற்றி பெற்றுள்ள அனுரா, தமிழர் பகுதிகளில் மிகவும் குறைவான ஓட்டுகளையே பெற்றுள்ளார். இதற்கு அவரது முந்தைய கால செயல்பாடு தான் காரணம் என்கின்றனர் தமிழர் தலைவர்கள்.இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுனா நடத்திய போராட்டங்கள் தமிழர் மத்தியில் அந்த கட்சி மீது ஏற்படுத்திய அதிருப்தி இன்னும் மறையவில்லை.
அதேபோல, சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்தியபோதும், அதற்கு அனுராவின் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இத்தகைய காரணங்களால் அவருக்கு தமிழர்கள் ஓட்டளிக்கவில்லை. ஆனால், சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவளித்த காரணத்தால், அவர் பெருவாரியான ஓட்டுகளை பெற முடிந்தது.
அதே நேரத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர்களும், வேறு சில தமிழ் அமைப்புகளும் இணைந்து பொது வேட்பாளராக அரிய நேத்திரனை நிறுத்தினர்.
அவரும் தமிழர் பகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.தற்போதைய அதிபர் ரனிலுக்கும் தமிழர் பகுதிகளில் ஓட்டுகள் கிடைத்துள்ளன. இவர்களுடன் ஒப்பிடும்போது, மிகச் சொற்பமான தமிழர் ஓட்டுக்களையே அனுரா பெற்றுள்ளார்.