இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த செப்டம்பர் 7 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மணிகண்டன், மகாதேவன், செந்தில்குமார் ஆகிய மூவருக்குச் சொந்தமான விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகுகளிலிருந்த 14 பேரையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். முன்னதாக, ஜெகதாபட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 4 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த 18 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 13 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், நான்கு விசைப்படகு ஓட்டுநர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதேபோல் கடந்த செப்டம்பர் 21 அன்று நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 3 விசைப்படகுகளை கைப்பற்றி, அதிலிருந்த 37 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது இலங்கைக் கடற்படை. இந்த 37 மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், 3 விசைப்படகுகளை நாட்டு உடமையாக்கியும், 37 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 50 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு | Thedipaar News

Related Posts