கர்நாடகாவை சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் அல்தாஃப் பாஷாவுக்கு கேரள அரசின் திருவோணம் லாட்டரியில் ரூ.25 கோடி பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை விற்ற தமிழகத்தை சேர்ந்த முகவர் நாகராஜுக்கு கமிஷனாக ரூ. 2.25 கோடி வழங்கப்படும் என கேரள நிதித்துறை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பாண்டவபுராவை சேர்ந்த அல்தாஃப் பாஷா (50) அந்த லாட்டரி சீட்டை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த போது, வயநாடு அருகிலுள்ள சுல்தான் பத்தேரியில் ரூ.1000 கொடுத்து 2 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அல்தாஃப் பாஷா கூறுகையில், ''கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். என் குடும்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கடவுளின் பெயரால் ஒவ்வொரு முறையும் லாட்டரி சீட்டு வாங்குவேன். இந்த முறை எனக்கு பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இந்த செய்தியை என் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. தொலைக்காட்சியில் பார்த்த பிறகே நம்பினர். அவர்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
எனக்கு கிடைக்க இருக்கும் பரிசு பணத்தில் என்னுடைய இரு மகள்களுக்கும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பேன். எங்களுக்காக புதிதாக வீடு ஒன்றை வாங்குவேன். மீதமுள்ள பணத்தில் என்னுடைய கடனை எல்லாம் அடைத்துவிட்டு, சந்தோஷமாக வாழ்வேன். வியாழக்கிழமை கேரளாவுக்கு சென்று எனது பரிசு பணத்தை வாங்க இருக்கிறேன்'' என்றார்.