சீனாவின் தூண்டுதலின்பேரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் ஆளும் லிபரல் கட்சியில் பிரதமர் ஜஸ்டினுக்கு எதிராக 24 எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது அவருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த ஆண்டில் கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் சந்தித்தால் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று பெரும்பாலான எம்பிக்கள் கருதுகின்றனர். இதில் 24 எம்பிக்கள் பகிரங்கமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 343 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்பிக்களின் ஆதரவு தேவை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சிக்கு 160 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தற்போது கூட்டணி கட்சி ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தலைமை வகிக்கக்கூடாது. லிபரல் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என்று லிபரல் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆளும் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற
அதிருப்தி எம்பிக்கள், வரும் 28-ம் தேதிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும். இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.