பிரித்தானிய ஊடகமான சனல் 4 இல் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒளிபரப்பப்பட்ட, இலங்கையில் , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஆவணப்படத்தில் தன்னை அரசாங்கத்தின் உயர் அதிகாரி என அடையாளப்படுத்திய நபரை விசாரணை செய்யுமாறு பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையிலான குழுவின் சனல் 4 காணொளி தொடர்பான விசாரணை அறிக்கையின் விபரங்களை இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பகிரங்கப்படுத்தும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி என வீடியோவில் கூறியுள்ள நபரின் அடையாளத்தை கண்டறிய குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளியில் புலனாய்வு அமைப்புகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி கருத்துக்களை வெளியிட்ட ,அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பதாக அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த நபர், தற்போதும் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தால், தற்போதைய அரசாங்கம் தேசத்துரோக குற்றத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கம்மன்பில தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அவதூறாக பதில் கூறுவதை விடுத்து அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகள் தொடர்பில் கம்மன்பிலவினால் நடத்தப்பட்ட இரண்டாவது விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இதுவாகும்.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ.இமாம் மற்றும் ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழுக்களின் இரண்டு விசாரணை அறிக்கைகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என கடந்த வாரம் கம்மன்பில கூறியிருந்தார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே. டி அல்விஸ் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட்ட முன்னாள் எம்.பி, தற்போது அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கூற்றுக்கு பதிலளித்த அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் உட்பட 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்தார். (P)
மாவீரர் நாள் தற்போது வியாபாரம் ஆகி அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது | Thedipaar News