பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அச்சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று பிரதமர் ட்ரூடோ எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிராம்டன் கோயிலில் நடந்த தாக்குதலுக்கு இந்து கனடியன் ஃப்வுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. கோயிலில் தாக்குதல் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் இருந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பீல் பிரந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா, “கோயில் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தணிக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுபோன்ற வன்முறை, கிரிமினல் செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்றார்.