அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் கால அரசியலை உன்னிப்பாக கவனித்தவர்கள் டிரம்பின் தேர்தல் வெற்றி அவ்வளவு எளிதானதாக இல்லை என்கின்றனர். தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்த தருணம் முதலே கடும் போட்டிகளுக்கு இடையேதான் பிரசாரத்தை அவர் முன் வைத்து சென்றார்.பல மாதங்கள் முன்னரே பிரசாரத்தை டிரம்ப் துவக்கினார்.
தொடக்க கால பிரசாரத்தில் எங்கு சென்றாலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்து வந்தது. தேர்தல் நேரத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்புக்கு எதிராக இருந்தவர் ஜோ பைடன். குறுகிய காலத்தில் போட்டியில் இருந்து பைடன் விலகுவதாக அறிவிக்க, அவரின் இடத்துக்கு வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
கடும் போட்டியாளராக விளங்கினார் கமலா ஹாரிஸ். அதே நேரத்தில் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே டிரம்புக்கு ஆதரவை தெரிவித்தார். டிரம்ப் பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தர தயார் என்று எலான் மஸ்க் அறிவித்தார்.
தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி ரெடி என்று டிரம்பும் தம் பங்குக்கு கொளுத்திப் போட்டார்.
வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது எனலாம்.
தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க முன்னேற்றம் பற்றிய தமது எதிர்கால திட்டங்களை டிரம்ப் அறிவித்தாலும் எலான் மஸ்கின் முழு ஆதரவு முக்கிய திருப்பமாக அமைந்தது என கூறலாம்.
தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட நிமிடத்துக்கு நிமிடம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுகளை விடாமல் மாற்றிக் கொண்டே இருந்தார் எலான் மஸ்க்.டிரம்ப் அதிபராகிறார் என்று முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் லைக் பொத்தானை இதய வடிவில் சிவப்பாக மாற்றி தமது சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்