ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார்.
சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார்.
இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்.