சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பிடித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனைக்கு வந்திருந்த இவர்கள் யார்? மருத்துவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு, இதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.