அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அவ்வகையில், முன்னாள் எம்.பி. துளசி கபார்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான துளசி கபார்டு, 2022-ம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார். 2024-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார்.
ஹவாய் மாநிலத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார். ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கபார்டு இந்துவாக மதம் மாறினார். தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார். துளசி கபார்டும் இந்து மதத்தை பின்பற்றுகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்டு முக்கியமானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். கமலா ஹாரிசுடன் டிரம்ப் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் துளசி உதவி செய்தார்.