சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் எலினா லாரெட். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.

பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு கடந்த சனிக்கிழமை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். ரயில் சென்னை வந்ததும், அவர் எலினாவை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவர், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் எலினாவை பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எலினா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Posts