காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், நெதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர், காசா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தடை செய்து, போர் குற்றம் இழைத்ததற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது வாரண்ட் உத்தரவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை இந்த கைது வாரண்ட்டில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இதனை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்ததாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.