மலையக மக்கள் 75 வருடங்களாக எதிர்நோக்கும் அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் என அக் கட்சியின் பதுளை மாவட்ட எம் பி.யான அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, சம்பளப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்ற நிலையில் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளது
மலையகத்தின் பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது தமிழ் பெண் உறுப்பினர் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக பதுளை மாவட்ட மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் .
அந்தந்த சமூகத்தில் உள்ள உண்மையான பிரதிநிதிகளை தெரிவு செய்தமையால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாட்டு மக்களினதும் ஆதரவைப் பெற்றது. . மலையகத்திலும் அவ்வாறான தெரிவே இடம் பெற்றுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரையும் அந்த கட்சி தெரிவுசெய்தது.
. கடந்த 75 வருட அரசியலில் மலையக மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.தற்காலிகமாக சில தீர்வுகள் அந்த மக்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அதற்கு தீர்வாகத்தான் மலையக மக்களின் பிரதிநிதியாக அந்த மக்களின் கஷ்டங்களை அறிந்தவள் என்ற வகையில்அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய மக்கள் சக்தி எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியானது மலையக மக்களின் காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை அதேபோன்று அந்த மக்களின் சம்பளப் பிரச்சினை, சுகாதாரம், கல்வி என முக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்வை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேசிய மக்கள் சக்தி ஹட்டன் பிரகடனத்தின் மூலம் முன்வைத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
கிராமப்புறத்திலும் மலையகத்திலும் வறுமை ஒழிப்பு முக்கிய தேவையாக உள்ளது. காணி உரிமை தொடர்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் மலையக மக்களின் முக்கியமான பிரச்சினை அவர்களுக்கான அங்கீகாரமாகும். மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு அவர்களும் இலங்கையர்கள் என்ற ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சலுகைகள் கடந்த காலங்களில் பறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலை மாற்றம் பெற்று மலையகத் தமிழர்கள் என்ற ரீதியில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் எதிர்கால சந்ததிகளும் சமூகமும் முன்னேற்றமடையவும் தேவையான வேலை திட்டங்களை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.
மலையகத்தின் கல்வி தோட்டப்புற பாடசாலை என்ற ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை அங்கு உருவாக்குவதே எமது நோக்கம்.இத்தகைய நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி தமது கொள்கைப் பிரகடனத்திலும் வேலைத் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
இக்காலங்களில் மலையக பகுதிகளில் மண் சரிவு பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அத்துடன் மண் சரிவி னால் கடந்த இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை. அதற்கான வேலைத் திட்டங்களை எமது அரசாங்கம் துரிதப்படுத்தும்.
மலையக தோட்டப் பகுதி பெண்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். அவர்கள் தொழில் செய்யும் இடங்களில் காணப்படும் பிரச்சினைகள், பொது வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். (P)