அனைத்துலகத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்துக்கான அடுத்த முன்முயற்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவம் டொரென்டோ மாநகரில் கடந்த 8ஆம் திகதி (December 8 2024) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தாயகத்தை நேசிக்கின்ற கனடா வாழ் மக்கள் மாத்திரமன்றி உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இணைய வழியாகவும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் உறுதியளித்தனர்.

புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நூற்றுக் கணக்கான அமைப்புகள் தாயகத்தை நோக்கிய அரவணைப்புக் கரங்களுடன் தமிழ் மக்களின் விடுதலை மற்றும்  தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளிலும்   அரசியல் கட்டமைப்புக்களை முன்னோக்கி நகர்த்துவதிலும் பணியாற்றி வருகின்றன. இந்த ஒரு பின்னணியில் இன்னும் ஒரு அமைப்பு தேவையா என்ற கேள்விகள் எழும்பலாம்

2009 ஆம் ஆண்டில் தாயக மண்ணில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த இருப்பையும்  கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசிய அவசரத் தேவைகளுக் கூடே தமிழ் மக்களின் இனப் பரம்பலை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் மக்களிடையே விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இதற்கும் அப்பால் தாயக "தமிழர் அரசியல்"; என்பது திசை மாறியதன் விளைவு இந்த அரசியல்மீது தாயக மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இதனால் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தாயக மண்ணில் நேரடியாக நிலை கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த ஒரு பின்னணியில் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றது என்பதுதான் டொரென்டோ மாநகரில் நடைபெற்ற "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்து கொண்டோரினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களினதும் ஏகோபித்த முடிவாக அமைந்தது.

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நிமால் விநாயகமூர்த்தி கருத்துரைக்கையில் 2009 க்குப் பின் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையாகும். "தாயகம்"; என்பது தாயகத்தில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர் மக்களுக்கும் அத்திவாரமாகும். தாயக மண்ணின் அத்திவாரம் அசைக்கப்படுவதையும் தகர்க்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர் சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதனை இலக்காகக் கொண்டே"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளதுஇதனை முன்னோக்கி நகர்த்த புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து வருகைதந்நத சட்டத்தரணி விக்னேஸ்வரா தனது வாழ்த்துரையில் 

" போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தலைமை இன்றி அரசியல் அநாதைகளாக உள்ளனர். தாயக மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாக மாறி விட்டது. கடந்தகால தியாகங்கள ;மறக்கப்பட்டுள்ளன. தியாகங்கள் செய்தவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து தியாகங்களைச் செய்த  தாயக மக்களும் புறந்தள்ளப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியமே கேள்விக்குள்ளாக்பட்டுவிட்டது. இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியம் ன்பது "நாடாளுமன்ற மாகாணசபைகளுக்கான கதிரைகளுக்கான "தேசியமாக" மாறிவிட்டது. இத்தகைய அபாயகரமான போக்கில் இருந்து தாயகமும் தமிழ்த் தேசியமும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். இதற்கு "அனைத்துலகத் தமிழ் பேரவை" அமைப்பின் வருகை அவசியமாகுகின்றது என்று குறிப்பிட்டார்.

இணையவழி வாழ்த்து

இணைய வழியூடாகக் கலந்து கொண்டவர்களில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தனது வாழ்த்துரையில் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியத் தேவையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் குறிப்பாக தாயக மண்ணின் பொருளாதார சமூக மேம்பாடு பண்பாடு மேம்படுத்தப்படல் வேண்டும். தாயக அரசியல் கபளீகாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஈழத் தமிழர் என்ற வகையில் புலத்திலும் தாயகத்திலும் ஒன்றிணைய வேண்டும். இதனை முன்னெடுக்க "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின்" வருகை அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் செல்வநாதன் இளையதம்பி கருத்துரைக்கையில் தமிழர் போராட்டத்தை முன் நோக்கி நகர்த்த  ஐந்து முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டார்.

1. தாயகத்தில் மக்கள் தொகை குறைவடைந்து கொண்டு போகின்றது. மறுபுறம் தமிழர்களின் இனப்பரம்பல் பறி போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகை இன்றி போராட்டத்தை நகர்த்த இயலாது. கூடுதலான பிள்ளைகளைப் பெற்றால் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தாயக மக்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.எனவே கூடுதல் பிள்ளைகளைப் பெறுபவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். இல்லையேல் இன்னும் இரண்டொரு வருடங்களில் தாயகத் தமிழர் இனவிகிதாசாரத்தில் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவர்.

2.பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடு போக விரும்புகின்றனர். தாயகத்தில் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். பொதுத் தொழில் கட்டமைப்பு தனியார் தொழிற் துறை என்பன கட்டி எழுப்பப்பட வேண்டும். தாயக விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும்.

3.தாயகக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பாடசாலைகள் கூடுதலான வளங்களை புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து பெறுகின்றன. பெரும்பாலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன.இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழ் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

4.தாயகத்தில் பண்பாடு கலாசாரம் என்பன சீரழிந்து கொண்டு போகின்றது. மதுபாணம் மற்றும் போதைவஸ்த்து பாவணை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சீரழிவிற்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். தாயக மண் போதைவஸ்த்து மதுபாண பாவணையில் இருந்து மீட்டெடுக்கப்படல் வேண்டும்.

5. தாயக மக்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும். வதிவிட வசதியை உறுதிப்படுத்துவதுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதுடன் மக்கள் நிம்மதியாக வாழ உதவி செய்ய வேண்டும். தாயகத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். யூதர்கள் போன்று தாயக  பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். தாயகப் பொருளாதாரத்தைக் கட்டி ழுப்பினால் மக்கள் தாமாக அரசியல் செய்வர்.

ராமு மணிவண்ணன் தமது வாழ்த்துரையில் " 2009 க்குப் பின் தமிழர்களின் தலைமையில் ஒரு வெற்றிடம்  உள்ளது. வரலாறு கற்றுத்தந்த பாடம் என்ன? இன்றும் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாளத்தையும்  வாழ்வாதாரத்தையும் தேட வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்து செல்ல வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

லோகன் லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கியதுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

லிங்கஜோதி வினாசித்தம்பி ரஜீவ் முத்துராமன்பிரசன்னா பாலச்ந்திரன் பாலச்சந்திரன் நாகலிங்கம்  மற்றும் பலரும் கருத்துரை வழங்கினர்.வாழ்த்துரைகளை வழங்கினர்.இந் நிகழ்ச்சியை கென் கிருபா ஒறுங்கிணைத்து வழிநடத்தினார். இறுதியில் மரியராசா மரியாம்பிள்ளை நன்றியுரை வழங்கினார்.



Related Posts