டொராண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாலை, லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் பெல்லமி ரோட் நார்த் சந்திப்புக்கு அருகிலுள்ள டிம் ஹார்டன்ஸ் கடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிறுவனை மீட்டதாக டொராண்டோ பொலிஸ் பரிசோதகர் எர்ரோல் வாட்சன் தெரிவித்தார்.
டொராண்டோ அவசர மருத்துவ சேவையினரின் தகவலின்படி, அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரின் சரியான வயதையும் பொலிஸார் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது கடையில் இருந்த ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் வாட்சன் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணைப் பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தற்போது அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டிற்கு வழிவகுத்த காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவ நேரத்தில் காபி கடை மிகுந்த நெரிசலுடன் இருந்ததா என்பது பற்றியும் உறுதியான தகவல் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் காவல்துறையையோ அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸை அடையாளம் தெரியாமல் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Font size:
Print
Related Posts
