சந்தையில் பச்சை அரிசி, சம்பா மற்றும் நாட்டரிசி என்பவற்றுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக வும் இந்த அரிசி வகைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டாலும் அவை அதிக விலைக்கு விநியோகிக்கப்படுவதால் சிறு வியாபாரிகள் அரிசி கொள்வனவு செய்வதில்லை என்றும் மரந்தகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 5,200 மெட்ரிக் தொன் அரிசி தொகை இன்று நாட்டை வந்தடையவுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலையை விடவும் கூடிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டமையின் காரணமாக, அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
அதற்கமைய, இதுவரையில் தனியார் துறை மற்றும் அரசாங்கத் தரப்பினால் 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச வணிக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தால் 5,200 மெற்றிக் தொன் அரிசித் தொகை இரண்டு கட்டங்களாகவும் 20,800 மெற்றிக் தொன் அரிசித் தொகைக்காக இரண்டு விலைமனு கோரல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச வணிக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்ர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதில் 5,200 மெற்றிக் தொன் அரிசித் தொகையின் முதலாம் கட்டம் இன்று (24) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மூடப்பட்டிருந்த மரதகஹாமுல்ல அரிசி விற்பனை நிலையம் நேற்று (23) மீண்டும் திறக்கப்பட்டது. அரிசியை மாத்திரம் விற்பனை செய்யும் 46 வர்த்தக நிலையங்கள் இருப்பதுடன் அவற்றில் 12 வரையான விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாகவும் மரதகஹாமுல்ல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கீரி சம்பா, கெகுலு சம்பா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் மாத்திரமே விற்பனை செய்யப்படுகின்றன. பச்சை அரிசி, சம்பா மற்றும் நாட்டரிசி விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த அரிசி வகை சந்தைக்கு விநியோகிக்கப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக தொகையிலேயே கிடைக்கப்பெறுகிறது.
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பாலான தொகையில் அரிசியை இறக்குமதி செய்யத் தயாராக இல்லை. அவ்வாறு அதிக விலையில் அரிசியைக் கொள்வனவு செய்ய சிறியளவான வியாபாரிகள் தயாராக இல்லை. இதுவே உண்மை நிலைமையாகும். இதனால் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் எண்ணம் தமக்கில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். (P)