மாணவர் என்ற போர்வையில் கனடா அழைத்துச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்குள் அவர்களை சட்டவிரோதமாக அனுப்பும் மோசடி நடந்து வருகிறது. இந்த ஆள்கடத்தலில் கனடாவைச் சேர்ந்த கல்லுாரிகள் மற்றும் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து இந்தியாவின் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
கடந்த 2022, ஜனவரியில் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவின் எல்லையில், கடும் பனி மற்றும் குளிரில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.இவர்கள் நான்கு பேரும் குஜராத்தின் தின்குசா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கனடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களை கனடாவுக்கு அனுப்பிய பாவேஷ் அசோக்பாய் படேல் என்ற புரோக்கரை கைது செய்தனர். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வந்தது.
இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:கனடாவில் உள்ள கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. 262 கனடா கல்லுாரிகளுடன், இந்த இரண்டு இந்திய நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்தாண்டு மட்டும், ஒரு இந்திய நிறுவனம், 25,000 மாணவர்களையும், மற்றொரு நிறுவனம், 10,000 மாணவர்களையும், கனடா கல்லுாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளன.
இதற்கு பிரதிபலனாக, இந்திய நிறுவனங்கள் கூறும், அமெரிக்கா செல்ல விரும்பும் சிலருக்கு, கனடா கல்லுாரிகள் இடம் அளிப்பதாக கடிதம் கொடுக்கும்.மாணவர் விசா கிடைத்ததும், அவர்கள் கனடா வழியாக, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த மாணவர்கள், கல்லுாரியில் சேராததால், அவர்கள் செலுத்தும் கல்வி கட்டணமும் திருப்பித் தரப்படும்.
இதற்காக, இந்த இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு, குஜராத், மஹாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் புரோக்கர்கள் உள்ளனர்.ஒரு நிறுவனத்துக்கு, 3,500 பேரும், மற்றொன்றுக்கு, 1,700 பேரும் புரோக்கர்களாக உள்ளனர்.இவ்வாறு சட்டவிரோதமாக கனடா வாயிலாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு, தலா 60 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த ஆள்கடத்தலில் கனடா கல்லுாரிகளுக்கும், இரண்டு இந்திய நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், பல ஆவணங்கள், 19 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.