ஆப்பிள் ஐபோன் சிரி(siri) மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பயனர்களின் தனியுரிமையை மீறுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ஆப்பிள் நிறுவனம் 95 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
தற்செயலாக சிரியை(siri) ஆக்டிவேட் செய்த பிறகு, ஆப்பிள் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் பதிவுசெய்து, விளம்பரதாரர்கள் போன்ற மூன்றாம் தரப்பினருக்கு இந்த உரையாடல்களை வெளிப்படுத்தியதாக மொபைல் சாதன உரிமையாளர்கள் புகார் கூறினர்.
ஆப்பிள் ஒப்புக்கொண்ட தீர்வு அங்கீகரிக்கப்பட்டால், செப்டம்பர் 17, 2014 முதல் கடந்த ஆண்டு இறுதி வரை ஐபோன்கள் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களை வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நுகர்வோர் தங்கள் புகார் கோரிக்கைகளை தாக்கல் செய்யலாம். க்ளைம்களின் அளவைப் பொறுத்து கிடைக்கும் பணம் குறையும் அல்லது அதிகரிக்கலாம் என்றாலும், ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு சிரி பயன்படுத்தப்பட்ட சாதனத்திற்கு 20 டாலர் வரை பெறலாம்.
நீதிமன்ற ஆவணங்களில் உள்ள மதிப்பீடுகளின்படி, தகுதியுள்ள நுகர்வோரில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே கோரிக்கைகளை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியான நுகர்வோர் அதிகபட்சம் ஐந்து சாதனங்களில் இழப்பீடு பெறுவதற்கு வரம்பிடப்படுவார்கள். செப்டம்பர் 2014 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் 705 பில்லியன் டாலர் லாபத்தின் ஒரு சிறு பகுதிதான் இந்த 95 மில்லியன் டாலர் ஆகும்.