18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது.
இந்த வரைவு விதிகள் குழந்தைகள் மற்றும் குறைபாடுடைய தனிநபர்களின் தரவுகள் பாதுகாப்பு சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. தனிப்பட்ட தரவுகளை கையாளும் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் சிறார்களின் தரவுகளைக் கையாள்வதற்கு முன்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஒப்புதலை சரிபார்க்க சம்மபந்தப்பட்டவர்கள் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகள் அல்லது டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் அடையாள டோக்கன்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வரைவு விதிகள், குழந்தைகளின் தரவுகளில் கவனம் செலுத்துவதோடு, மேம்பட்ட நுகர்வோர் உரிமைகளையும் உறுதி செய்கிறது.
தாங்கள் குறித்த தரவுகளை நீக்கவோ அல்லது அந்த தரவுகள் ஏன் சேரிக்கப்படுகின்றன என்ற வெளிப்படையான விளக்கங்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கு நுகர்வோருக்கு அனுமதி அளிக்கிறது.
தரவு சேகரிப்பு வழிமுறைகளை கேள்வி கேட்பதற்கும் தரவு பயன்பாடு பற்றிய தெளிவான விளக்கம் பெறுவதற்கும் நுகர்வோர்களுக்கு உரிமையளிக்கிறது.