கனடாவின் எட்மன்டன் நகரில் இணைய வழி மூலமான விற்பனைக்கான சந்திப்புகளின் போது இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து, ஆன்லைன் விற்பனையாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் கிஜி மற்றும் முகநூல் சந்தை Facebook Market place வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புகளில் குறைந்தது 15 கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் அதிக மதிப்புள்ள பொருட்கள் — குறிப்பாக கைப்பேசிகள் மற்றும் பிரபல ஆடைகள் — குறிவைக்கப்பட்டுள்ளன.
வாங்குபவராக நடிக்கும் நபர் முதலில் விற்பனையாளரை சந்தித்து பொருளை பரிசோதிப்பார். பின்னர் குறைந்தது ஒருவராவது கூட்டாளி சேர்ந்து, விற்பனையாளரை மிரட்டி பொருளை பறித்துச் செல்கிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், ஒரு சம்பவத்தில் துப்பாக்கியும் காட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் சம்பவங்களில் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்பட்டு, திருட்டு குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிமுகமில்லாதவர்களை சந்திக்கும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான, பொதுமக்கள் நிறைந்த இடங்களில் சந்திக்கவும், ஒருவரை கூடவே அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே விற்பனை செயல்முறையை கைவிடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய வழி விற்பனை செய்யும் கனடியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
Font size:
Print
Related Posts
