கனடாவின் டொரான்டோவில் இருந்து மும்பைக்கு, கனிஷ்கா ஏர் இந்தியா விமானம் 1985 ஜூன் 23ல் புறப்பட்டது. பிரிட்டனின் லண்டன் செல்லும் வழியில் அயர்லாந்து வான்பரப்பில் சென்றபோது, விமானத்தில் குண்டுவெடித்து சிதறியது. இதில் 22 விமான ஊழியர்கள், 307 பயணியர் என 329 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகளே காரணமாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்து நிகழ்ந்த 40வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பலியானவர்களின் உறவினர்கள் சிலர் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர். இந்த நிலையில், வெடிகுண்டு விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மீது விமான குண்டு வெடிப்பு தொடர்பான எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் கனடா தேசிய போலீஸ் தெரிவித்துள்ளது.வழக்கை விசாரித்த கனடா போலீஸ் உதவி கமிஷனர் டேவிட் தேபூல் கூறியதாவது: ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி தல்விந்தர் சிங் பார்மார், குண்டு தயார் செய்த இந்தர்ஜீத் சிங் ரேயாத் ஆகியோருடன் இந்த பயங்கரவாதியும் இருந்துள்ளார்.வெடிகுண்டு சோதனை நடத்தியபோதும் உடன் இருந்துள்ளார். தனியுரிமை சட்ட விதிகளின்படி அவரது அடையாளத்தை நாங்கள் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.