தெஹ்ரானில் உள்ள முக்கிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அரை உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான 'தஸ்னிம்' (Tasnim) வெளியிட்ட அறிக்கையின்படி, IRGC இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரானில் உள்ள ஈரான் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Iran University of Science and Technology) வடகிழக்கு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
எனினும், இத்தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளே நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்காசிய (மத்திய கிழக்கு) பிராந்தியத்தில் அமைந்துள்ள அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் ஈரானின் "சட்டபூர்வமான இலக்குகளாக" (Legitimate Targets) கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், இரண்டு அமெரிக்க அல்லது இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களைத் தாக்குவதற்கு IRGC திட்டமிட்டுள்ளது எனவும், தாக்குதலுக்கு இலக்காகும் பல்கலைக்கழகங்களின் பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பல்கலைக்கழக வளாகங்களிலிருந்து குறைந்தபட்சம் 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அலிடிமேட்டத்தில், தெஹ்ரான் நேரப்படி எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) நண்பகல் 12 மணிக்குள் அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் பல்கலைக்கழக மீதான குண்டுவீச்சுத் தாக்குதலை உத்தியோகபூர்வமாக கண்டிக்க வேண்டும் என்று IRGC கோரியுள்ளது. அவ்வாறு கண்டிக்கத் தவறினால், எச்சரிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெப்ரவரி மாத இறுதியிலிருந்து அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், கல்வி நிறுவனங்களைக் குறிவைத்த IRGC-இன் இந்த எச்சரிக்கை சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை மேலும் தீவிரமடையச் செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
